ஆனால் அந்த பெண்ணிடம் சகியின் குணங்களைத் தேடவும் இல்லை. அந்த பெண் எப்படி இருந்தாலும் அப்படியே அவன் ஏற்றுக் கொள்ள பழகிக் கொண்டான் என்றாலும் அடி நெஞ்சில் ஒரு ஏமாற்றம் இருந்து கொண்டு தான் இருந்தது சர்வாவிடம். அந்த ஏமாற்றம் தன் மனைவி இறந்த பிறகும் கூட வெளிப்படவில்லை.
ஆனால் கைநழுவி போன பொருளை மீண்டும் என்றைக்கு பார்த்தானோ அன்றிலிருந்து அவனது ஏமாற்றம் மிகப் பெரிதாகவே அவனுக்கு தோன்றியது. அந்த ஏமாற்றம் பெரிய அளவில் உருக்கொண்டு சகியை சுழன்று அடிக்கிறது என்பதுதான் மிகவும் சரி.
அவனும் எவ்வளவு கட்டுப்படுத்தி பார்த்தாலும் சர்வாவாலும் சகியை ஒட்டுமொத்தமாக விலக்கி விட முடியவில்லை. தன் ஏமாற்றங்களுக்கு காரணமானவள் நலமுடன் இப்பொழுது இல்லை என்பதும் அப்போது இருந்த செல்வ வளமும் இப்பொழுது இல்லை என்பதும் நன்கு புரிந்து இருந்தது. இதன் பின்னணி என்ன என்பதும் அவனுக்கு புரியவில்லை.
அதனால் தான் அவன் டிடெக்டிவிடம் சென்றான். அதன் மூலம் பெறப்பட்ட தகவல்கள் அவனுக்கு ஒப்பானதாக இல்லாமல் போனது. இன்னும் கொடுமை தன் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகள் எல்லாமே தனக்கு தெரியாமல் போனதை எண்ணி குமைந்துப் போனான். ஏதோ ஒரு காரணங்களுக்காக நிகழ்கிறது என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது. ஆனால் அந்த நிகழ்வுகள் தானாக நிகழாமல் போனதுதான் சர்வாவுக்கு அதிக அளவில் கோபம் வந்தது.
தன் வாழ்க்கையை பகடைக்காயாக மாற்றியவர்களை சும்மா விட்டால் அவன் சர்வேஸ்வரன் கிடையாதே. சர்வா அல்லவா... சகல வல்லமை பெற்ற சர்வவை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல என்பதை அவன் நிரூபிக்க வேண்டும். நிரூபித்தே ஆக வேண்டும்... கண்டிப்பாக நிரூபிக்கவும் செய்வான்.
அதற்காக தான் சகியிடம் அவன் நெருங்கி பழகவும் செய்கிறான். அவனது உள் நோக்கம் புரியாமல் சகி விளையாடுகிறான் என்று அவனை விட்டு ஒதுங்கி நின்றாள். ஆனால் ஒதுங்கி நின்றாலும் அவன் இனிமேல் விட வேண்டுமே விடும் அளவு சர்வ கிடையாது.
இரவு அர்த்த சாமத்தில் தூக்கம் தொலைத்தவள் வெகு நேரமாகிய பொழுதும் தன் மீது இன்னும் சர்வாவின் வாசனையும் அவனது பிள்ளைகளின் வாசமும் ஒட்டி இருப்பது போலவே தோன்றியது சகிக்கு.
என்ன செய்தால் இந்த வாசனை அகலும் என்கிற நிலையில் சகி இருக்க, சென்று குளிக்கலாம் என்றாலும் இன்னொரு பக்கம் மனமும் வரவில்லை. தாயில்லாப் பிள்ளைகளை எண்ணி அவளது உள்ளம் உருகியது என்றாலும் மனைவி இல்லா கணவனை எண்ணிப் பார்க்க அவளது உள்ளம் நடுநடுங்கிப் போனது. அவள் அறிந்த ரகசியம் அவளைத் தவிர யாரும் அறியா ரகசியம் அவளது நெஞ்சில் நீக்கமற நிறைந்திருப்பது அந்த சர்வேஸ்வரன் தான் என்றால் அது மிகை இல்லை.
திருமணம் நடைபெறாமல் போனாலும் அவனுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றதை அறிந்தாலும் அவள் கொண்ட முதல் காதலை அவளால் அவ்வளவு எளிதாக மறக்க முடியவில்லை. காதல் தான் தனக்காக முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆணை ஒரு பெண்ணால் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது அல்லவா...
உனக்கே உனக்கு என்று ஒருவனை அவளது தந்தையே அவளுக்கு முழு உரிமை கொடுத்து முன்னிறுத்த அவனை மனதில் நிறைக்காமல் போவாளா பெண். அந்த அளவு சர்வாவை அவள் காதலிக்கிறாள். ஆனால் வெளியே யாரிடமும் தன் எண்ணத்தை இன்றுவரையில் காட்டவே இல்லை. ஏன் அந்த சர்வாவிடமும் கூட காட்டவில்லை. காட்டவும் மாட்டாள். அவனே நெருங்கும் போது கூட அவளது உள்ளத்தை இன்னும் இறுக்கமாக தாழிட்டுக் கொண்டாளே தவிர ‘வா’ என்று இரு கரம் நீட்டி அவள் அழைக்கவில்லை.
அதற்கு முழு காரணம் அவள் கற்ற நாகரீகமும் அவளை வளர்த்த விதமும் தான் காரணம். தன் தந்தையை எங்கும் தலைகுனிய விடக்கூடாது என்பதில் அவள் கொண்ட உறுதி தான் காரணம்... எனவே தன் தந்தையை இன்னொருவர் ‘உன் பெண்ணைப் பார் என்ன வளர்ப்பு வளர்த்து இருக்கிற... இது தான் உன் வளர்ப்பா...’ என்று யாராவது சுட்டிக்காட்டி விட்டால் அதை தன் தந்தையால் தாங்க முடியாது என்பதால் என் தந்தையை முன்னிறுத்தி அவள் தன் உணர்வுகளை கூட கட்டுப்போட்டு வேலி போட்டுக் கொண்டிருக்கிறாள்.
அதை உடைக்கும் தருணத்தை தான் சர்வ பார்த்துக் கொண்டிருக்கிறான் இனி வரும் சூழலில் சர்வா சகியை சிறை எடுப்பானா அல்லது சகி சர்வாவை தன்னை விட்டு ஒரேடியாக விலக்கி வைத்து விடுவாளா என்பது தான் கதை…
அன்று இரவு தூக்கத்தை தொலைத்த சகி அடுத்த நாள் காலையில் சர்வா குடுத்த நேரத்தை விட சற்று முன்னதாகவே அவனுடைய கெஸ்ட் ஹவுஸ்க்கு சென்றாள். அங்கு பிள்ளைகள் எழுந்து அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். காலை வேலை இன்னும் அங்கு எதுவும் ஆகவில்லை. அறையில் பிள்ளைகள் மட்டும் இருக்க சர்வா எங்கே என்று விழிகளால் தேடினாள். அவன் இருக்கும் அரவமே இல்லாமல் இருக்க கண்டு உள்ளுக்குள் நுழைந்து பிள்ளைகளை அள்ளிக் கொண்டாள்.
வெகு காலையிலே அவளைக் காணவும் பிள்ளைகளுக்கு ஒரே குஷியாகிப்போனது. அவளிடமே ஒட்டிக்கொண்டு பேச்சு கொடுக்கிறேன் என்று அவளுடன் பேசிக்கொண்டே பல் விளக்கி அவள் மேல துப்ப வருவது போல பயம் காட்டி, கீழே துப்பி, குளிக்கிறேன் என்கிற பெயரில் அவளுக்கு சோப்பு போட்டுவிட்டு, பாதி அவளையும் நனைத்து, நாங்களே உண்ணுகிறோம் என்று சொல்லி அவளுக்கு ஊட்டி விட்டு, பாதி சாப்பாட்டை அவள் மேலே சிந்தி நாஸ்த்தி செய்து மீதி பாதியை கீழே சிந்தி பாதி வயிறு கூட ரொம்பாமல் சேட்டை செய்யும் கண்ணனை விட அழகாக இருக்கும் மழலைகளை அள்ளிக் கொண்டவள் அந்த இடத்தையும் அவளையும் அவர்களையும் சுத்தம் செய்து விட்டு மீண்டும் ஒரு தட்டில் சாப்பாட்டை போட்டு இருவருக்கும் வயிறு முட்ட ஊட்டி விட்டாள்.
அது எல்லாவற்றையும் எந்த அரவமும் செய்யாமல் சற்று தள்ளி நின்று சர்வ பார்த்துக் கொண்டிருந்தான். பிள்ளைகளை ஓரளவு கவனித்து விட்டு திரும்ப சர்வா எப்பொழுதும் போல நிலைப்படியில் இரு கரங்களைக் கட்டிக் கொண்டு நின்றிருந்ததை பார்த்து ஒரு கணம் தூக்கிவாரிப் போட்டது. அதோடு அவனது பார்வையில் உள்ள கேள்வியை முழுமையாக உணர்ந்தாள். அவனது அந்த கேள்விக்கு அவள் எந்த பதிலும் சொல்லாமல் பிள்ளைகளை கேர்டேக்கரிடம் ஒப்படைத்தவள்,
அவனைத் தாண்டி சென்று அலுவலக அறையில் அமர்ந்து கொள்ள, அவனது இதழில் ஒரு குறுநகை எழுந்தது. நேராக அலுவலக வேலைக்குள் நுழைந்து கதவை சாற்றியவன் எப்பொழுதும் அலுவலக அறை கதவை சாத்தாதவன் இன்று சாத்துகிறானே என அதிர்ந்தவள் அவனைப் ஏறெடுத்துப் பார்த்தாள்.
“இதுல அதிர்ச்சி ஆக எதுவும் இல்லை. எனக்கு நீ கட்டுப்பட்டா உன் குடும்பத்தை எதுவும் செய்யாமல் விட்டு வைப்பேன். இல்ல உன் நண்பனா நீ உன் வீட்டுல வச்சி இருக்கிற கார்த்திக்கை பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்ட சொல்லி காலம் பூரா வெளியவே வர முடியாத அளவுக்கு செய்திடுவேன்...” என்று மிரட்டினான்.
அவனது மிரட்டலில் உள்ளுக்குள் பெரும் கோவம் சுழன்றது.
“இப்படி கார்னர் பண்ண உங்களுக்கு வெட்கமா இல்லை... ஒரு பெண்ணோட மனசை புரிஞ்சுக்காம அவளை வெறும் சதையா பார்க்கிற உங்களிடம் போய் பேசிக்கிட்டு இருக்கேன் பாருங்க என்னை சொல்லணும்...” என்றவளை கூர்ந்து பார்த்தான்.
அவனது பார்வையில் இருந்த அர்த்தத்தை உணர்ந்து மௌனமானாள். அவளுக்கே தெரியுமே சர்வா அப்படி பட்டவன் இல்லை என்று அதனால் மேற்கொண்டு எந்த சுடு சொல்லையும் பேசவில்லை அவள். மிக தீவிரமாக தன் உள்ளத்தை அவளுக்கு திறந்து காட்டி இரத்தின சுருக்கமாக பேசினான்.
சர்வா பேசிய பேச்சில் அவளுக்கு சற்றே நடுக்கம் வந்தது என்றாலும் அவளது உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்ளாமல் அவன் சொன்னவற்றிற்கு ஒப்புதல் கொடுத்தாள்.
அதன் பிறகு அவளுக்கு அதிக வேலைகள் இல்லை. முழுவதும் பிள்ளைகளை பார்த்துக் கொண்டே அவ்வப்பொழுது அவனையும் ஏறெடுத்து பார்த்துக் கொண்டு அவனையும் கவனித்துக் கொண்டே இருந்தாள். அவளது கவனிப்பு என்பது அவனுக்கு பரிமாறுவது, உணவு உண்ணும் பொழுது அவனுக்கு பிடித்த பதார்த்தத்தை எடுத்து வைப்பது என நல்ல விதமாகவே இருவருக்கும் அந்த காலை பொழுது நகர்ந்தது.
அதேபோல அவனும் பிள்ளைகளை தொடுவது போல அவளை தொடுவதும், பிள்ளைகளுக்கு முத்தமிடுவது போல அவளுக்கு யாரும் அறியாமல் முத்தம் கொடுப்பதும் என காதலர்கள் போல அவர்கள் இருந்தார்கள். ஆனால் சர்வாவின் தொடுகையை முழு மனதாக ஏற்க முடியாமல் தடுமாறி கலங்கும் விழிகளை அவனிடமிருந்து மறைத்துக் கொண்டு இருந்தாள்.
ஆனால் அவனுக்கு அவளது கண்ணீர் அப்பட்டமாய் தெரிந்தாலும் அவன் கொண்ட கொள்கையில் இருந்து பின் வாங்கவில்லை. அவனுக்கு அவள் வேண்டும். அந்த பிடியிலே அவன் நின்றான். இருவரின் மனதிலும் பல விசயங்கள் நிரம்பி இருந்தாலும் அதையும் மீறி இருவரிடமும் ஒரு நெருக்கம் தென்பட்டது என்பது உண்மை. பாதி நாளுக்கு பிறகு ஊட்டியை சுற்றி பார்க்கலாம் என்று அவன் சொல்ல,
“டூரே முடிஞ்சு போயிடுச்சுடா... உங்க அப்பா இப்ப தான் ஊட்டியை சுத்தி காட்ட போறாராம்... ரொம்ப மோசம் டா ஆது குட்டி உங்க அப்பா...” என்று ஆதுவிடம் சொல்வது போல சர்வாவை பார்த்தபடி இவள் கிண்டல் பண்ண,
“ஆது குட்டி உன் சகிக்கிட்ட சொல்லி வை. நான் நெனச்சா இன்னும் ஒரு வாரத்துக்கு லீவு கொடுத்து எல்லாரையும் ஊட்டியிலே ஸ்டே பண்ண வச்சிடுவேன்னு. பிறகு டூர் இன்னும் ஒரு வார காலம் நீடிக்கும்... நீடிக்கவும் செய்ய முடியும் இந்த சர்வாவால்” என்று அவன் திமிராக சொல்ல,
“ரொம்பத்தான்...” என்று நொடித்துக் கொண்டவள், அவனோடு கிளம்பி ஊட்டியை சுற்றிப் பார்க்க சென்றாள்.
இவர்கள் நால்வரும் போட்டிங் போகலாம் என்ற எண்ணி போட்டில் ஏறி ஏரியை சுற்றி வர ஆரம்பித்தார்கள். அந்த நேரம் ஊட்டியை சுற்றி பார்க்க வந்த அவனது அலுவலகத்தார்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார்களும் போட்டிங் போகலாம் என்று வந்திருந்தார்கள்.






