'எப்ப பாத்தாலும் இப்படி ரொம்ப உரிமை எடுத்துக்கிட்டே ஏதாவது பண்றது. வேலை செய்யலைன்னா மட்டும் திட்ட வேண்டியது…' என்று தனக்குள் முணகிக் கொண்டவள் ஒரு சர்வன்டை வரச்செய்து பிள்ளைகளை அவர்களிடம் ஒப்படைக்க சர்வா அவளை ஒரு பார்வை பார்த்தான்.
அந்த பார்வையில் என்ன இருக்கிறது என்பதை உணர முடியாமல் அவள் தடுமாற, "பிள்ளைகள் இங்கேயே இருக்கட்டும் நீங்க போகலாம்…" என்று அவரை வெளியேற்றியவன் சகியை முறைத்துப் பார்த்தான். அவனது அந்த பார்வையில் 'ஏன் இந்த வாயை திறந்து சொன்னா என்னவாம். பிள்ளைகளை நீயே பார்த்துக்கோ அப்படின்னு சொன்னா மணி மகுடம் சரிஞ்சிடும் பாரு' முணகியவள் அதன்பிறகு சிஸ்டத்தை அனைத்துவிட்டு பிள்ளைகளுடன் விளையாட ஆரம்பித்து விட்டாள்.
இருவரும் எதையும் வாய் விட்டு பேசிக்கவில்லை. ஆனால் பிள்ளைகளை வைத்து இருவருக்குள்ளும் ஒரு நெகிழ்வு வந்தது.
இது இன்று மட்டுமல்ல தொடர்ந்து வந்த நாட்களில் எல்லாமே பிள்ளைகளை அலுவலகத்துக்கு கூட்டிக்கொண்டு வர ஆரம்பித்தான். அப்படி கூட்டிக் கொண்டு வந்தால் அன்று முழுவதும் சகிக்கு அலுவலக வேலை எதுவுமே இருக்காது. இரு பிள்ளைகளையும் கவனிப்பதிலேயே அவளுக்கு நேரம் ஓடிவிடும். அதுவும் சாயங்காலம் அவள் கிளம்பும் பொழுது அவளது கால்களை கட்டிக்கொண்டு பிள்ளைகள் அழும்.
அவளை விட்டு ஒரு இன்ஞ் கூட நகர மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். அப்பொழுது அதையும் இதையும் சமாதானம் செய்து சர்வா கூட்டிக்கொண்டு போய்விடுவான்.
தினமும் இதே தொடர்கதை ஆனது. காலையில் ஒன்பது மணியில் இருந்து மாலை ஆறு மணி வரை சகிக்கு பிள்ளைகளுடன் மட்டுமே நேரம் ஓடும். அவர்களோடு விளையாடி அவர்களுக்கு சாப்பாடு ஊட்டி அவர்களை குளிக்க வைத்து என்று அவர்களுடனே நேரம் நகரும்.
பல நேரம் குழந்தைகளை குளிக்க கூட வைக்காமல் அப்படியே அலுவலகத்துக்கு கூட்டிக்கொண்டு வருவான். அவள் தான் இங்கு வந்து குளிக்க வைப்பாள். ஆதலால் பாதி நேரம் அவள் நனைந்து போவதும் நடக்கும். அதை ரசனையான வழிகளுடன் சர்வா நோக்குவதும் தொடரும். அவனது பார்வையில் தன்னை படாமல் உள் அறையில் அவள் இருந்து கொள்வாள். ஆனாலும் பிள்ளைகளைப் பார்க்கிறேன் என்கிற போர்வையில் அவனும் சில நேரம் அவர்களுடன் அமர்ந்து அவளையும் அவளின் அந்த தோற்றத்தையும் ரசிப்பது நடக்கும்.
இதுபோல பல நாட்கள் அப்படியே சென்றது… அப்படி ஒரு நாள் அலுவலகத்துக்கு சர்வா தன்னுடைய இரு பிள்ளைகளோடு வந்தான். சகி அவனது அறையில் அமர்ந்து இருந்த படி அன்றைக்கான வேலைகளில் மூழ்கி இருக்க... பிள்ளை வந்த உடனே அவளிடம் ஓடியது. சர்வா எதையும் கண்டு கொள்ளவில்லை. பிள்ளைகளைக் கொண்டு வந்து அறையில் விட்டதோடு சரி தன்னுடைய இருக்கையில் சென்று அமர்ந்து தன்னுடைய வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டான் சர்வா.
அவளுக்கும் சில வேலைகளை கொடுத்து இருந்தான். ஆனால் அதை செய்ய விடாமல் அவனது பிள்ளைகள் மடியில் ஏறி அமர்ந்து கொண்டு அவளோடு விளையாட ஆரம்பிக்க அவள் தவிப்பாய் சர்வாவை நோக்கினாள்.
அவனோ அதையெல்லாம் சிறிதும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்..
“இம்மீடியட்லி எனக்கு இப்பவே வேணும் அந்த டீடைல்ஸ் கரெக்ட்டா இருக்கான்னு ஒரு டைம் செக் பண்ணிக்கோங்க இன்னைக்குள்ள அது முடிச்சாகணும்” என்று அவன் பேசிக் கொண்டிருக்க இவளுக்கு தான் பெரும் தவிப்பாய் போனது. பிள்ளைகளில் ஒன்று வாக்கரில் அமர்ந்து அவளது காலடியில் வந்து நின்றது.
இன்னொரு பிள்ளையும் சரசரவென்று ஏறி அவளது மடியிலே நின்று கொண்டு அவளது கழுத்தோடு கோர்த்துக் கொண்டு, முகத்தை தன்னை நோக்கி திருப்பி முகத்தோடு முகம் வைத்து இழைத்துக் கொண்டு விளையாடியவன் எங்கே அவன் விழுந்து விடுவானோ என்று பயந்து தன்னோடு சேர்த்து கட்டிக் கொண்டாள்.
அவனது சேட்டைகளுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து அமர்ந்திருந்தவளுக்கு காலடியில் இருந்த பிள்ளையின் தலையை கோதிக்கொடுத்து புன்னகைத்தாலும் அவன் கொடுத்த வேலை பாதியிலே நின்று கொண்டிருப்பதால் இவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பிள்ளைகளை ஒதுக்கவும் அவளால் முடியவில்லை. இவர்களை வைத்துக் கொண்டு வேலை செய்யவும் முடியவில்லை.
சர்வா ஏதாவது சொல்வான் என்று எதிர்பார்த்து இருக்க அவனோ அவனது வேலைகளிலே மூழ்கி இருந்தான். அவ்வப்போது ஓர கண்களால் சகியை அவளறியாமல் தெரியாமல் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். அவனது மனதில் என்ன இருக்கிறது என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என எதுவும் புரியாமல் இவள் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு அவனது முகத்தையே பார்த்துக் கொண்டே இருந்தாள்.
போதாததற்கு அவனுடைய மகன் சிஸ்டம் கீ போர்டில் அதையும் இதையும் அழுத்திக்கொண்டு விளையாட ஆரம்பிக்க செய்திருந்த பாதி வேலையையும் கலைக்க பார்த்தான். அவனது இரு கரத்தையும் ஒற்றை கையால் பிடித்துக் கொண்டு அவள் வேலை செய்ய ஆரம்பிக்க ஆது குட்டி அதற்கும் விடவில்லை. அவளது மடியில் இருந்து நழுவுவது போல இரண்டு காலால் உதைத்து நழுவி கீழே விழப் பார்க்க, கீபோர்டில் இருந்த கரத்தை வேகமாய் அவன் மீது வைத்து அவனை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
“டேய் ஏன்டா இப்படி பண்ற? குட்டி பையா கொஞ்ச நேரம் சும்மா தான் இருடா.. நான் இந்த வேலையை முடிக்காட்டி உங்க அப்பா என்னை திட்டுவாருடா” என்று அவனது காதோரம் மெல்ல கிசுகிசுக்க, அதை பார்த்து ‘ஈஈஈ..’ என்று புன்னகைத்தவன்,
இரு புறமும் தலையை ஆட்டிவிட்டு, “தீ எந்தோட அளையாட ஆ...” என்று அவன் கூப்பிட அவளுக்கு பாவமாய் போனது. அவனைப் பார்த்து “இப்போ என்னால முடியாதுடா தங்கம். நம்ம அப்புறமா விளையாடலாம். இப்போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு” என்று அவள் சொல்ல, அவன் அதை காதிலே வாங்கிக் கொள்ளவில்லை.
“ப்பயே எந்தோட தீ அளையாட ஏனும்... அந்தே ஆனும்...” என்று அவன் ஒற்றை காலில் நின்று அவளுடைய சிஸ்டத்தை அடித்து உடைப்பது போல கீபோர்டில் தட்டு தட்டுன்னு தட்டி தன் கோவத்தைக் காட்ட,
“அடேய்...” என்று அவனது இரு கரத்தையும் மடக்கிப் பிடித்துக் கொண்டவள் சர்வாவை பார்த்தாள்.
அவன் எதையும் கண்டு கொள்ளாமல் கால் மேல் கால் போட்டபடி இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்தவளுக்கு கோவம் வர, அவனை முறைத்துப் பார்த்தாள்.
ஒன்று வேலை செய்ய விடணும் இல்லையா பிள்ளைகளை வாங்கணும் இரண்டில் எதுவுமே செய்யாமல் எனக்கென்ன என்பது போல இருந்தவனை பார்த்து இவளுக்கு முறைக்க தான் தோன்றியது. அந்த நேரம் கதவை தட்டிக்கொண்டு யாரோ வர யாரென்று பார்த்தாள்.
வந்தவன் சர்வாவின் பி.ஏ. கிரி.. “சார்...” என்று அவன் வந்து நிற்க, சர்வா கண்களை காட்ட அவளது மேசையில் இருந்த கோப்புகளை அவன் எடுத்துக்கொண்டு வெளியே போய்விட்டான். அவள் திகைத்து பார்த்தாள்.
அவளது பார்வைக்கு எந்த பதிலும் விளக்கமும் கொடுக்காமல் தன்னுடைய சிஸ்டம் பக்கம் திரும்பிக்கொண்டான். அவனது செயலுக்கான அர்த்தம் முதலில் பிள்ளைகளை கவனி என்பதாக இருக்க பெருமூச்சு ஒன்றை விட்டவள் சிஸ்டத்தை அனைத்து விட்டு உள்ளுக்குள் இன்னொரு அறை இருக்க அதில் இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.
அங்கு சென்றவுடன் கதவை சாற்றி விட்டு இரு பிள்ளைகளையும் மடியில் வைத்துக்கொண்டு அவர்களுடன் விளையாட ஆரம்பித்தாள். அங்கிருந்து வெறும் சிரிப்பு சத்தம் மட்டுமே வர இங்கு அவனால் உட்காரவே முடியவில்லை.
என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்று அவனுக்கு உந்த, வேகமாய் சென்று கதவை திறந்தான். அங்கு இரு பிள்ளைகளையும் மடியில் படுக்க வைத்துக் கொண்டு இரு கைகளால் இருவருக்கும் கிச்சுகிச்சு மூட்டி விட்டுக் கொண்டிருந்தாள். அதில் சிறியவளும் இன்னும் முன்னேறி அவளது மார்போடு உறவாடிக் கொண்டிருக்க அதை பார்த்தவனுக்கு என்ன உணர்வு வந்ததோ சட்டென்று தலையை கோதிக்கொண்டு கதவை சாற்றி விட்டு மீண்டும் தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.
பிள்ளைகளுக்கு விளையாடியபடியே உணவையும் ஊட்டி விட்டாள் அவர்களோடு அவளும் சாப்பிட்டு எழுந்தாள். எல்லாவற்றையும் கழுவி விட்டு வரலாம் என்று போனவள் கழுவி கவிழ்த்து வைத்தவள். வேறொரு டிபார்ட்மெண்டில் இருந்து அவளுக்கு அழைப்பு வர பிள்ளைகளை அவனிடம் ஒப்படைத்து விட்டு இவள் வெளியேறினாள்.
வெளியே சென்று பத்து நிமிடம் கூட ஆகவில்லை. அந்த வேலையை முடித்து விட்டு உடனடியாக வந்தவள் கதவை திறந்துக்கொண்டு உள்ளே வர, அங்கே கண்ட காட்சியில் அதிர்ந்து தான் போனாள்.
சர்வா வெறும் துண்டுடன் மட்டும் இருந்தான். அலுவலக அறையில் அவ்வளவு பெரிய அலுவலக வளாகத்தில் அவன் வெறும் துண்டுடன் இருப்பதைக் கண்டு இவளுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. ‘என்ன இது இப்படி நிக்கிறாரு’ என்று ஒரு கணம் நெஞ்சம் தடதடத்துப் போனது. சுயம் உணர்ந்து சட்டென்று வெளியே போக பார்க்க...
“அந்த அளவுக்கு இங்கே எதுவும் சீன் நடக்கல...” என்று அவன் பல்லை கடித்தான்…
அதில் ஹாங் என்று ஒரு கனம் விழித்தாள்..
அவள் விழிப்பதை பார்த்து “பாப்பா வாந்தி எடுத்துட்டா. அதுதான் இப்படி...” என்று அவன் தலையைக் கோதிக் கொண்டு சொல்ல, அதில் பதட்ட மடைந்தவள்,
“என்னாச்சு ஏன் பாப்பா வாந்தி எடுத்துட்டா... நல்லா தானே இருந்தா?” என்று கேட்டவளுக்கு கூச்ச உணர்வுகள் சற்றென்று மாறிவிட, வேகமாக குழந்தை இருந்த இடம் நோக்கி ஓடினாள்.






