“ஆனாலும் உனக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது சகி...” என்று முறைத்துவிட்டு,
“அலுவலகம் போ... ஆனா நான் தான் கொண்டு வந்து விடுவேன். அதுக்கு சம்மதம்னா போ. இல்லன்னா போகாத...” என்று உறுதியாக சொல்லிவிட,
இதற்கும் சம்மதிக்க வில்லை என்றால் அவன் இன்னும் கடுப்பாவான் என்று உணர்ந்து சரி என்றாள். காலையில் ஆரம்பித்த இந்த சச்சரவில் அலுவலக நேரம் கடந்து போய் மேலும் ஒரு அரைமணி நேரம் தாமதமாகி இருந்தது.
அதை ஈடு கட்டும் வகையில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை வேகமாக செலுத்தினான்.
“டேய்... எதுக்குடா இவ்வளவு வேகமா போற.. முடியல டா.. இடுப்பெல்லாம் வலிக்குது. இதுக்கு நான் ஒழுங்கா பேருந்துலையே போய் இருப்பேன்...” என்று அவனது முதுகிலே இரண்டு சாத்து சாத்தினாள்.
“அதுல போனா நீ இந்த ஜென்மத்துக்கு போய் சேர மாட்ட...” என்று கண்ணாடியில் அவளை பார்த்து பழிப்புக் காட்ட...
“ரொம்ப பேசாதடா.. ஏழைகளோட மகிழுந்து அது தான் தெரியுமா?” என்றவள் அவனது முதுகில் தலையை சாய்த்துக் கொண்டாள். காலை நேரத்தில் போட்ட மாத்திரை அவளுக்கு தூக்கத்தை கொடுக்க அசந்து போய் வந்தது...
“இந்த நிலையில நீ அலுவலகம் போய் தான் ஆகணுமா? அப்படி ஒரு நாள் நீ போகலன்னா அங்க ஒண்ணும் குடி முழுகி போகாது...” என்று கார்த்திக் பல்லைக் கடிக்க,
“டேய்... மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத. கொஞ்சம் சோர்வா இருக்கு அவ்வளவு தான். மத்தபடி வேற எடுத்தும் இல்ல... உன் மேல சாஞ்சதுக்கு சாரி...” என்றவளை கொலை வெறியுடன் திரும்பி பார்த்தான்.
“எரும எரும... நான் எதுக்கு சொன்னேன். நீ எதை சொல்ற...” அவளது தலையில் தட்டியவன், அப்படியே அவளது கழுத்தோடு சேர்த்து தன் முதுகில் அவளது தலையை சாய்த்துக் கொண்டான்.
“ஒண்ணும் வேணாம் போ...” என்று அவள் பிகு பண்ண,
“இப்போ நீ சாயல... வண்டியை அப்படியே வீட்டுக்கு விட்டுடுவேன்...” என்று அவன் மிரட்ட, அதில் அவளது இதழ்களில் புன்னகை வர,
“ம்கும்... இதுக்கெல்லாம் குறைச்சல் இல்லை...” என்று அவளை திட்ட,
“ப்ச்.. போடா... எப்போ பாரு என்னை திட்டிக்கிட்டே இருக்குறதே உன் வேலையா போச்சு...” என்று அவனிடம் மல்லுக்கு நின்றவள் அவனது முதுகில் சுகமாக தலையை சாய்த்துக் கொண்டாள்.
அவளது முகத்தில் இருந்த புன்னகையை உணர்ந்தபடியே கொண்டு வந்து அலுவலகத்தில் இறக்கி விட்டான்.
“சாயங்கலாம் நானே வந்து கூட்டிட்டு போறேன். நீ வெயிட் பண்ணு. அதுக்குள்ள பேருந்துல ஏறி வந்துடாத... யாராவது காலை போட்டு மிதிச்சா அப்புறம் இன்னும் காயம் ரணமாயிடும்...” என்று எச்சரித்தவன்,
காலையில் அரக்க பறக்க செய்த மத்திய உணவை அவளிடம் நீட்டினான்.
“தேங்க்ஸ் டா கார்த்தி...” என்று அவனிடம் புன்னகைத்து வாங்கிக்கொள்ள அவனுக்கு மனமெல்லாம் நிறைவாய் இருந்தது.
“பார்த்து கவனமா இரு... சப்போஸ் இடையில முடியலன்னா கால் பண்ணு நான் வந்துடுறேன்..” என்றான். அவனது அக்கரையில் நனைந்தவள்,
“சரிடா... நான் பார்த்துக்குறேன். நீ பார்த்து நிதானமா போ... ரோட்டுல போகும் பொழுது அவசரப் படாத..” என்று எச்சரித்தவள் அலுவலகத்துக்குள் நுழைந்தாள்.
காலை கீழ ஊன்றவே முடியவில்லை. பல்லைக் கடித்து தன் வலியை பொறுத்துக் கொண்டு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தாள். கீழே இருந்து சர்வாவின் அறைக்குள் வந்து அமர்வதற்குள் போதும் போதும் என்றாகிப் போனது.
முக சுளிப்புடன் உள்ளே நுழைந்தவளை தீவிரமாக பார்த்துக் கொண்டு இருந்தான் சர்வா. அவனுக்கு காலை வணக்கத்தை வைத்ததவள் தன் சிஸ்ட்டத்தை ஆன் பண்ண,
பதிலுக்கு வணக்கம் சொல்லாதவன் எடுத்த எடுப்பில், “அவன் யாரு...?” என்று கேட்டான் மிக நிதானமாக. ஆனால் குரலில் மலையளவு ஆத்திரம் இருந்ததோ என்னவோ...!
சர்வாவின் இந்த கேள்வியில் அவளது கரம் ஒரு கணம் அப்படியே நின்றது. பின் சுதாரித்து தன் வேலைகளை பார்த்துக்கொண்டே,
“இங்க நான் வேலை பார்க்க மட்டும் தான் வந்ததா எனக்கு ஞாபகம்...” என்றாள் நக்கலாக.
அவளது இந்த நக்கலான கேள்வியில் எப்பொழுதும் போல அவனுக்கு ஒரு எரிச்சலைக் கொடுக்க,
“உனக்கு வேலை செய்ய மட்டும் தான் இந்த வேலை. ஆனா எனக்கு அப்படி இல்லம்மா... எனக்கு இந்த நிறுவனத்தோட நற்பெயரும் முக்கியம்” என்றான் நக்கலாக.
“உங்க நிறுவனத்தோட நற்பெயர் கெட்டு போற அளவுக்கு இங்க அப்படி என்ன பண்ணிட்டேன்” என்றாள் காட்டமாக.
“என்ன பண்ணல... விட்டா ரோட்டுலயே குடும்பம் நடத்தி இருப்ப...” என்றான் கேவலமாக. அந்த சொல்லில் பட்டென்று கோவம் வந்துவிட,
“இப்படி மத்தவங்க என்ன பண்றாங்கன்னு கொஞ்சம் கூட மேனர்சே இல்லாம வேவு பாக்குறீங்களே இது தான் உங்க லட்சனமா சார்?” கேட்டவளை அறைய கையோங்க,
அவனது உயர்ந்த கரத்தை ஒரு கணம் பார்த்தவள், “மிஸ்டர் சர்வேஸ்வரன்...” என்று அவனை அழுத்தம் திருத்தமாக கூப்பிட்டாள்.
“நான் உன்னோட பாஸ்..” என்றான் திமிராய்.
“அது நீங்க என் பெர்சனலை பத்தி பேசாம இருந்திருந்தா நானே உங்க பெயரை சொல்லி கூப்பிட்டு இருக்க மாட்டேன். ஆனா நீங்க என் பெர்சனல் விசயத்துல மூக்கை நுளைச்சதுனால தான் இந்த மரியாதை” என்று எதற்கும் அசையாமல் இருந்தவளை கூர்ந்து பார்த்தவன்,
“அப்போ இனி உன் லீலையை என் அலுவலகத்துல வேலைக்கு இருக்கிற வரை பண்ணாத” என்றான் எரிச்சலுடன்.
“அதை சொல்ல நீங்க யாரு? உங்க அலுவலகத்துல உள்ள நான் ஏதாவது பண்ணினா நீங்க கேட்கலாம். அதை விட்டுட்டு கேம்பஸ் தாண்டி நடக்குறதை பற்றி நீங்க கவலை கொள்ள வேண்டாம்” என்றாள் நறுக்கென்று.
“கேம்பஸ் வெளிய நீ எப்படி நடந்துக்குறியோ அதே குணம் என் கேம்பஸ் குள்ளயும் வந்துட்டா என்ன பண்றது. அது தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என்றான் நக்கலுடன். அதில் கோவம் கொண்டவள்,
“நான் வேணா என் அப்பாக்கிட்ட இருந்து கேரண்டி கார்ட் வாங்கிட்டு வரவா” என்றாள் கடுப்பாக.
“ஹஹஹா... ஏற்கனவே நீ செய்த உன் ஒழுங்கீன செயலுக்கு அந்த ஆளு இன்னும் எனக்கு பதிலே சொல்லல... இதுல இப்பவும் உன்னை எப்படி நம்புவேன்னு அதுவும் நான் வெறுக்கிற பட்டியலில் முதல் இடத்துல இருக்கிற உன் அப்பன் கிட்டயே போய் கேரண்டி கார்டு கேக்குறேன்னு சொல்ற பத்தியா...? உனக்கு ஹியுமர் சென்ஸ் ரொம்ப ஜாஸ்த்தி தான்...” என்றான் கோவமாக. அவனது இந்த வார்த்தைகளில் முகம் கருத்துப் போனாள்.
“இந்த கோவத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. இப்போ இந்த கேள்விக்கு பதில் சொல்லு ம்மா... என்னவோ கேட்க கூடாததை கேட்ட மாதிரி தைய தக்கான்னு குதிச்சியே... இப்போ பதில் சொல்லு” என்று கால் மேல் போட்டு திமிராக சகியை பார்த்து கேட்டான்.
அவனது கேள்வியில் ஒரு கணம் முகம் கருத்துப் போனாலும் அடுத்த நொடி தன் உயரத்துக்கு நிமிர்ந்து நின்றவள் விழிகளில் கொஞ்சம் கூட சலனமே இல்லாமல் அவனது கண்களை ஊடுருவி பார்த்தாள்.
“நான் தப்பு செய்து இருந்தா அதுக்கு கண்டிப்பா உரியவங்க கிட்ட கால்ல கூட விழுந்து மன்னிப்பு கேட்டு இருந்திருப்பேன். ஒரு வேளை என் மீது தவறு இல்லாத பட்சத்தில் என் முடி கூட மன்னிப்புக்காக வேண்டி அசையாது. இது என்னுடைய குணம். அதுலையே தெரிஞ்சுடும் நான் தப்பு செய்தவளா இல்லையா என்று.” என்று தீர்க்கமாக உரைத்தாள்.
அவளது உரையில் இருந்த மறைபொருளை நுணுக்கி உள் வாங்கியவனின் இதழ்களில் ஒரு ஏளன புன்னகை தோன்றியது.
“தப்பு செய்துவிட்டு சாயம் பூசவும் நல்லா கத்துக்கிட்ட போலையே...” என்று கேலி வேறு செய்தான்.
அவனது கேலியில் அவளது இதழ் ஓரத்தில் புன்னகை எழுந்தது.
“என்னை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை மிஸ்டர் சர்வேஷ்வரன்... அதோட சாயம் பூசுற வேலை என்னோட வேலை கிடையாது. அது உங்களுக்கு கண்டிப்பா தெரிய வரும். அப்போ ரொம்ப வருத்தப் படுவீங்க” என்று உறுதியாக மறுத்து கூறியவள், இன்னும் திடமாக அவனை ஏறிட்டு,
“என்னோட பெர்ஸ்னலை அனலைஸ் பண்ண நான் யாருக்கும் உரிமை கொடுத்தது இல்லை. நீங்க உங்க எல்லைக்குள்ள இருப்பது தான் உங்களுக்கு நல்லது...” என்று திடமாகவே அவனை எச்சரித்தவள் அவனுடைய பதிலுரைக்கு கூட காத்திருக்காமல் தன் வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.
அவளது இந்த நிமிர்வும் கம்பீரமும் அவனையே ஒரு கணம் அசைத்து தான் போட்டு இருந்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் மீசையை முறுக்கியவன், அவளுக்கு கேட்கும் படி,
“உன் பெர்சனல் என்னை பாதிச்சதுன்னா கண்டிப்பா உன் பெர்ஸ்னல்ல என் தலையீடு இருக்கும். அதை என்னைக்கும் மறந்துடாத” என்றான் அழுத்தம் திருத்தமாக..
அதை காதில் வாங்கியவள் அவனை முறைத்துப் பார்க்க அவன் உல்லாசமாய் விசில் போட்ட படியே தன் சிஸ்டத்தை பார்வை இட்டான். அவனது இந்த ஸ்டேட்மென்ட் அவளை வெகுவாக தாக்கியது. அதை ஓரக்கண்ணால் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் குளுகுளுவென்று இருந்தது.
“யாருக்கிட்ட சர்வாடி... சர்வேஸ்வரன்... என்னையவே ஆட்டி வைக்க பார்த்தா சும்மா இருப்பனா... சகியா இருந்தாலும் சரி சங்கரேஷ்வரியா இருந்தாலும் சரி எல்லாமே இந்த சர்வேஸ்வரனுக்குள்ள அடக்கம்...” என்று மீசையை முறுக்கியவன் தன் பார்வையை அவள் மீது நிலைக்க விட்டான்.
அவனது பார்வையில் இருந்த வீரியம் கண்டு உள்ளுக்குள் சற்றே படபடத்துப் போனாள். ஆனால் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றாள்.
இயல்பாக அலுவலக வேலை நகர்ந்தது என்று எல்லாம் சொல்ல முடியாது. முடிந்தவரை சர்வா அவளை ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தான். அதற்கெல்லாம் அவள் எந்த உணர்வையும் காட்டவே மாட்டாள்.
ஒரே ஒரு பார்வையை மட்டும் அவன் மீது செலுத்துவாள். அதை தாண்டி அவளுடைய எந்த உணர்வையும் அவதானிக்க முடியாது...! அதற்கு அவள் விடவும் மாட்டாள்.
அன்று விடுமுறை தினம் என்பதால் கிருஷ்ணா வெங்காயத்தை உரித்தபடி, “எங்காவது வெளியே போகலாம் ம்மா. வீட்டுக்குள்ள இருக்கிறது ஒரு மாதிரி இருக்கு.. முழுதா நாலு வருசம் இந்த நாலு சுவத்துக்குள்ளையே முடிஞ்சி போச்சு... வெளி காத்தை சுவாசிக்கணும் போல இருக்குடா...” என்று மிகவும் ஏக்கப்பட்டு சொல்ல,
“ஆமாம் ப்பா... வீடு விட்டா காலேஜ்.. காலேஜ் விட்டா வீடுன்னு ஒரே போறா இருக்கு... இப்படி வெளியே தெருவ போயிட்டு வந்தா மனசு கொஞ்சம் நல்லா இருக்கும். எங்க போகலாம்னு நீங்களே சொல்லுங்க ப்பா...” மிரு ஆவலுடன் கேட்க,
“ஆனாலும் உன் தொங்கச்சிக்கு ரொம்ப தான் ஆசை சகி. எப்படா வெளிய போகலாம்னே காத்துக்கிட்டு இருப்பா போல” என்று சகியின் காதை கார்த்திக் கடிக்க,
“எங்க தைரியம் இருந்தா இத அவ காது கேட்க சொல்லு” என்று சகி சமைத்துக் கொண்டே நமட்டு சிரிப்புடன் அவனை பார்த்து கேட்டாள்.
“எதுக்கு எங்கோ போற மாரியாத்தாவை இழுத்து வந்து என் மேல ஏத்தி விடுறதுக்கா... எனக்கு உடம்புல தெம்பு இல்ல சாமி. ஆளை விடு” என்றான் கும்பிடு போட்டு.
“ம்கும்... அப்புறம் எதுக்குடா உனக்கு இந்த வெட்டி பந்தா” என்று சிரித்தாள்.
“இருந்தாலும் உன்னை மாதிரி யாரு வாருவா... நீ தான் நான் என்ன சொன்னாலும் கேட்டுக்குவ... அதே மாதிரி எல்லோரையும் எதிர் பார்க்க முடியுமா?” என்று அவன் உள்ளர்த்ததோடு உரைக்க சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“கார்த்திக்...” என்று அவனது தோளை தொட,
“எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் சகி... என் வாழ்க்கையே நீ தான்... உன்னை தாண்டி என்னால எதையும் யோசிக்கவே முடியாது. நீ மட்டும் என் வாழ்க்கைக்குள்ள வரமா போய் இருந்தா என் நிலைமை என்ன ஆகி இருக்கும்னு என்னால நினைச்சிக் கூட பார்க்க முடியாது...” என்று பெருமூச்சு விட்டவனை தோளோடு அணைத்துக் கொண்டவள்,
“அதையே நானும் சொல்லலாம் கார்த்திக். எனக்கு நீ கிடைச்சது வரம். அது உனக்கும் தெரியும்” என்றாள்.
“ஆனா நீ அந்த சர்வா கம்பெனில ஒர்க் பண்றதை என்னால ஏத்துக்கவே முடியல. போயும் போயும் அவன் கிட்ட... பழசை எதுவும் பேசாமலா இருக்கான். அவன் குணம் அது இல்லையே. பழசை பழசை பேசி பேசி உன்னை அவன் வருத்தப்பட வைக்கலன்னு உண்மையை சொல்லு” என்று அவன் சட்டென்று கோவப் பட,
ஆம் வீட்டில் எல்லோருக்கும் தெரியும். சகி சர்வா நிறுவனத்தில் வேலை செய்வது. முதல் மாத சம்பளம் வாங்கிய உடனே மூவரையும் அழைத்து சகி உண்மையை சொல்லி விட்டாள்.
அவள் எது செய்தாலும் சரியாக தான் இருக்கும் என்று நம்பும் கிருஷ்ணன் இந்த முறையும் அதே நம்பிக்கையை அவள் மீது வைத்தார். ஆனால் கார்த்திக்கு தான் இந்த விசயத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
சகி அவனை எந்த சாமாதானமும் செய்யவில்லை. அதற்கும் அவன் முறுக்கிக் கொண்டு நிற்க,
“கார்த்திக் என் மேல நீ முழு நம்பிக்கை வச்சி இருந்தா இவ்வளவு கோவப் பட மாட்ட. இதை மட்டும் தான் என்னால சொல்ல முடியும். அதுக்கு மேல உன் விருப்பம்...” என்று அதிகம் பேசாமல் பேசிய வார்த்தையிலேயே அவனுக்கு மிக தெளிவாக புரிய வைத்தாள் சகி.
அதன் பிறகு கார்த்திக் அவளிடம் கொவப்படவில்லை. ஆனால் மனம் தாங்காமல் இதே போல அவ்வப்பொழுது இது மாதிரி வெடிக்கவும் செய்வான்.
அதற்கெல்லாம் மிக நிதானமாக பதில் கொடுப்பாள். இப்பவும் இதே போலவே கொஞ்சமும் உணர்ச்சி வசப்படாமல், தெளிவாக அவளது உள்ளக்கிடங்கை அவனிடம் சொன்னாள்.
“கார்த்திக் ஏன் இப்போ இவ்வளவு எமோஷனல் ஆகிற... லீவிட் கார்த்திக். நம்ம வாழ்க்கைக்குள்ள எப்பொழுதும் அவர் தலையீடு இருக்காது... அதுக்கு நான் அனுமதிக்கவும் மாட்டேன்...” என்று உறுதி கொடுத்தவளை கூர்ந்து பார்த்தான்.
“நிஜம் தானா...?”
“இன்னும் சந்தேகமா? என்னை நம்பு கார்த்திக்...” என்று அவள் உறுதி கூற, அந்த உறுதியை இன்றே உடைத்துப் போட காத்திருந்தான் சர்வேஸ்வரன். தான் கார்த்திக்கு கொடுத்த வாக்கை வெகு விரைவில் முறித்துப் போடுவோம் என்று அறியாமல் அவனிடம் உறுதி கொடுத்தாள் சகி.
அனைவரும் கிளம்பி கோயிலுக்கு போயிட்டு அப்படியே பீச் போகலாம் என்று முடிவெடுத்து கோயிலுக்கு போய் மனமுருக சாமி கும்பிட்டுவிட்டு முட்டுக்காடு சென்றார்கள்...
முட்டுக்காடு போட்டிங் ஹவுஸ் வந்தார்கள். ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது இவ்விடம் வந்து.. நான்கு வருடங்களுக்கு முன்பு அடிக்கடி இவ்விடம் மூவரும் வருவார்கள். கிருஷ்ணாவுக்கு உடம்பு முடியாமல் போனதில் இருந்து வெளியே போவதையே குறைந்துப் போனது.
இப்பொழுது தான் கோயில் குளம் என்று போய் வருகிறார்கள். அதுவும் இந்த முட்டுக்காடு வருவது இப்பொழுது தான்.
எனவே அனைவருக்குள்ளும் ஒரு மலர்ச்சி இருந்தது... ஒரு எதிர் பார்ப்பு இருந்தது... தனி படகு ஆளில்லாமல் இருக்க அதில் இவர்கள் நால்வரும் ஏறி அமர்ந்து இருந்தார்கள். இன்னும் இரண்டு இருக்கைகள் வெற்றிடமாக இருக்க ஆட்களுக்காக காத்துக் கொண்டு இருந்த நேரம் ஆளுமையுடன் தன் பிள்ளைகளை கையில் வைத்துக் கொண்டு ஒற்றை ஆளாக அந்த படகில் ஏறி அமர்ந்தான் சர்வா.
அவனை அங்கு எதிர் பாராதவள் திகைத்துப் போய் தன் தந்தையை ஏறிட்டாள். அவரின் பார்வை சர்வாவின் மீது நிலை குத்தி இருந்ததை பார்த்து தன் அப்பாவின் கரத்தை கெட்டியாகப் பற்றிக் கொண்டாள்.
நான்கு வருடங்களுக்கு முன்பு இன்னும் சிறு பிள்ளையாய் இருந்த காரணத்தால் மிருக்கு அவன் யார் என்று தெரியவில்லை. அதே போல கார்த்திக்கும் அவன் யார் என்று தெரியவில்லை. ஆனால் சர்வாவை பற்றிய அனைத்து விசயமும் தெரியும். ஆனால் இது தான் அவன் என்று கார்த்திக்கு தெரியாது.
இரு பிள்ளைகளுடன் கொஞ்சம் கூட தடுமாறாமல் ஏறி வந்தவனை வியப்புடன் தான் பார்த்தாள் மிரு. கார்த்திக் அவனுக்கு கைக்கொடுக்க வர, அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன்,
“நோ நீட்...” என்றவன் ஒரு இருக்கையில் சென்று அமர்ந்து விட்டான். அதன் பிறகு மிக நிதானமாக தனக்கு எதிர் புறம் அமர்ந்து இருந்த சகியை ஒரு பார்வை பார்த்தான். அவளோ அவன் புறம் திரும்பவே இல்லை. கடல் அலைகளில் மனதை கொள்ளைக் கொடுத்தவள் போல தன் பார்வையை வெளிப்புறமே வைத்திருந்தாள். ஆனால் தன் கரத்தை தந்தையின் கரத்தை விட்டு விலக்கவே இல்லை.
சர்வாவின் ஆழ்ந்த பார்வை தன் மீது இருப்பதை உணர்ந்து இருந்தாள் சகி. ஆனாலும் அவன் புறம் சற்று கூட திரும்பவில்லை. அதற்கு முக்கிய காரணம் தன் தந்தையும் கார்த்தியும் மட்டுமே. லவலேசமாக அவன் மீது தன் பார்வை பட்டால் கூட இல்லாத ஒன்றை இருப்பது போல அவர்களே கற்பனை பண்ணிக்கொண்டு மேற்கொண்டு எது வேண்டுமானாலும் செய்ய முற்படுவார்கள்.
முடிந்து போன ஒன்றை வைத்து அவர்கள் தடுமாறக்கூடும் என்று உணர்ந்தாள். எனவே தன் பார்வையை கூட அவன் புறம் திருப்பவே இல்லை சகி. கடலில் அலை அலையாக எழுந்து நுரை பொங்க படகில் மோதி விளையாடிக் கொண்டிருக்கும் அலையை மிக தீவிரமாக ரசித்துக் கொண்டு இருந்தாள்.






