அத்தியாயம் 9

 
Admin
(@ramya-devi)
Member Admin

“ப்ச்... ஆர்கியுமென்ட் பண்ணாம ஒழுங்கா இங்க இருந்து கிளம்பு...” சொன்னவன், அவள் முறைப்பதை பார்த்து,

“கெடவுட்...” என்றான். அவனது இந்த செயலில் முகம் கருத்தவள், அவனை அடிக்க கரம் ஓங்கியது... முயன்று அதை கட்டுப் படுத்தியவள்,

அவன் ஏற்பாடு செய்திருந்த காரை உதாசீனம் செய்து விட்டு தாங்கி தாங்கி நடந்து பேருந்து நிலையத்தை அடைந்தவள் பேருந்தில் ஏறி வீட்டுக்கு சென்றுவிட்டாள்.

அவளது இந்த உதாசீனம் சர்வாவை பல்லைக்கடிக்க வைத்தது. இவன் கெட்டவுட் சொல்லும் பொழுது ஏற்படாத உணர்வு அவள் அவனை உதாசீனம் செய்யும் பொழுது பெரிதாக வந்தது. பல்லைக் கடித்தபடி போகும் சகியை கடுப்புடன் பார்த்தான்.

அவள் அந்த புறம் போகவும் இந்த பக்கம் அவனது தந்தை செல்வநாயகம் அடித்து பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தார். அவரது பரபரப்பை பார்த்தாலும் எதையும் கண்டுக் கொள்ளாமல் தன் பிள்ளைகளிடம் கவனத்தை வைத்தவன் தன்னுடைய அறைக்குப் போக,

“அம்மா சொன்னது எல்லாம் உண்மையா சர்வா? இப்போ எதுக்கு அந்த பொண்ணு நம்மோட வீட்டுக்கு வந்தது... நடந்துப் போன எல்லாத்தையும் நீ மறந்துட்டியா? முதல்ல அந்த பெண்ணை நம்ம கம்பெனியை விட்டு வெளியே அனுப்பு.. மறுபடியும் எல்லாம் முதல்ல இருந்து வர்றதை என்னால ஏத்துக்க முடியாது...” என்று அவர் படபடக்க,

அவரை ஆழ்ந்து கூர்ந்து பார்த்தவன்,

“நான் மறந்த ஒரு விசயத்தை நீங்களும் உங்க மனைவியும் எனக்கு ஒவ்வொரு வார்த்தையாலும் நினைவுப் படுத்துறீங்கன்னு தோணுது...” என்றவனின் பேச்சில் இருவரும் திகைத்துப் போய் நின்றார்கள்.

“சர்வா...” என்று இருவரும் ஒரே குரலில் அதிர்ந்துப் போய் நிற்க,

“என் மனைவி இறந்து போயிட்டா.. அதுக்காக நான் இவளை இரண்டாந்தாரமா கல்யாணம் செய்துக்குற ஐடியா எல்லாம் இல்ல... நீங்க இந்த அளவுக்கு ரியாக்ட் பண்ணி என்னை அதை செய்ய வச்சிடாதீங்க...” என்று அவன் மேலும் ஒரு குண்டை தூக்கிப் போட கப்பென்று வாயை மூடிக் கொண்டார்கள் இருவரும்.

இப்போதைக்கு இது போதும் என்று எண்ணினானோ என்னவோ தன் பிள்ளைகளுடன் தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.

மகன் பேசிவிட்டு போனதை பார்த்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்...

“பேசாம என் தம்பி மகளை சர்வாவுக்கு பார்க்கலாமாங்க... ஏன்னா இவ்வளவு நாள் அவன் எதுக்கும் பிடியே குடுக்கதவன் இப்போ அவன் வாயாலையே இரண்டாந்தாரம் பற்றி பேசுறான்...” என்று தன் கணவரை பார்த்தார் கவிதா.

அவர் தாடையை அழுத்தமாக தேய்த்துக் கொண்டவர் தன் மனைவியை ஒரு பார்வை பார்த்தார்.

“ஏங்க நான் சொன்ன ஐடியா ஒத்து வராதா?”

“அதுக்கு இல்ல கவி... இதை வேற மாதிரி டீல் பண்ணனும். ஏற்கனவே வந்த மருமகளால நமக்கு நிறைய நிறுவனம் கைவசம் ஆனது... அதோட அவ வீட்டுக்கு ஒரே பொண்ணு. சோ நம்ம பேர பிள்ளைகளை காட்டி அவங்க கிட்ட இருக்கிற எல்லா சொத்தையும் வாங்கிப் போட்டாச்சு... இப்போ நாம உன் தம்பி பொண்ணை பார்க்கணும்னா அவ வீட்டுல ரெண்டு அண்ணனுங்க அவளுக்கு இருக்காணுங்க.. சோ சொத்து எதுவும் தேறாது...” என்றார்.

“ஓ...! நீங்க அப்படி வர்றீங்களா? அப்போ என் பிரெண்டுங்க சர்கில்ல தேடவாங்க..” என்று விழிகளில் பேராசை படர கேட்டார்.

“கொஞ்சம் பொறு... நாம செய்யிறதை சர்வாவுக்கு தெரியாம தான் செய்யணும்” என்றவர் தன் மனதில் கொண்ட எண்ணத்தை நிறைவேற்ற நாள் குறித்தார்.

தன்னை சுற்றி நடக்கும் எந்த நிகழ்வுகளையும் கண்டுக் கொள்ளாமல் தன் பிள்ளைகளுடன் மூழ்கி இருந்தான் சர்வா. அப்படி காட்டிக் கொண்டானோ என்னவோ...!

காலில் கட்டுடன் வந்த சகியை வீட்டில் இருந்த இருவரும் கலவரத்துடன் பார்த்தார்கள். தங்கை கல்லூரி சென்று இருந்தாள்.

“என்னடா ஆச்சு...? ஏன் இப்படி கட்டுடன் வர...?” தந்தை பதற,

“ஒண்ணும் இல்லப்பா ஜஸ்ட் கண்ணாடி கீழ இருந்தது. அதை தெரியாம மிதிச்சுட்டேன். காலை கிளிச்சிடுச்சு...” என்றவளை தாங்கி இருக்கையில் அமரவைத்தான் கார்த்திக்.

“எப்படி நீ தான் எப்பொழுதும் செருப்பு போட்டு இருப்பியே... எதுக்காக கழட்டுன...” கண்டிப்புடனும் ஆராயும் விழிகளுடனும் கேட்டவனிடம் ஒரு சின்ன புன்னகையை கொடுத்தவள்,

“கால் ரொம்ப வேர்த்ததுன்னு கழட்டுனேன்டா. அதை மறந்துட்டு கீழே கண்ணாடி சிதறி இருப்பதை கவனிக்கல...” என்று சமாளித்தவள்,

“கால் வலிக்கிதுடா... கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்” என்று பாவமாய் பார்க்க,

“நீ போ பாப்பா... அவன் கிடக்குறான். எதுக்கு எடுத்தாலும் குறுக்கு விசாரணை பண்ணிக்கிட்டு...” என்று கார்த்திகை முறைத்தவர், அவளை படுக்க போக சொல்ல கண்களை மூடி படுத்து விட்டாள் அறையில்.

பொய் சொல்கிறோமோ என்று எண்ணினாலும் தேவையில்லாமல் எதையாவது சொல்லி அவர்களையும் கலவரப் படுத்தாமல் இருப்பது சாலச்சிறந்தது. எண்ணியவள் கண்களை மூடி தூங்க ஆரம்பித்தாள்.

மனதில் ஏற்பட்ட அலற்சியா அல்லது அலைச்சலா எதுவோ ஒன்று அவளை ஆழ்ந்த நித்திரைக்கு கொண்டு செல்ல, நிம்மதியாக தூங்கினாள். சிறிது நேரம் கழித்து கார்த்தி வந்து எட்டிப் பார்க்க அவளது சீரான சுவாசம் கண்டு பெருமூச்சு விட்டவன் கிருஷ்ணனுக்கு சாப்பாடு போட்டுக் கொடுத்தவன் தானும் அவரோடு அமர்ந்து சாப்பிட்டான்.  

மிருதுலாவுக்கு இந்த ஒரு வருட கல்லூரிப் படிப்பு இருந்தது... அதை முடித்து விட்டால் போதும். ஏற்கனவே  கேம்பஸில் இண்டர்வியூவில் செலக்ட் ஆகி இருந்தாள். அதனால் சற்று பாரம் குறையும். அதோடு பீஸ் கட்ட வேண்டிய நெருக்கடியும் ஏற்படாது... அதையெல்லாம் எண்ணி தான் அந்த நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றாள் சகி.

அவள் படித்த படிப்புக்கு வெளிநாட்டில் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் தான். ஆனால் அவள் மட்டும் போனாள் என்றாள் பரவாயில்லை. ஓரளவு மேனேஜ் பண்ணிவிடுவாள். குடும்பத்தோடு செட்டில் ஆவது என்பது இயலாது. அதோடு கிருஷ்ணனின் உடல் நிலையும் ஒத்து வராததால் அதையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, உள்ளூரிலே வேலை தேடினாள்.

அவளது நேரமோ என்னமோ சர்வாவின் இண்டர்நேஷனல் கம்பெனி அவளை இரு கரம் நீட்டி வரவேற்க அவளது திறமையையும் பார்த்து உள்ளுக்குள் இழுத்துக் கொண்டது.

கைநிறைய சம்பளம்... நான்கு பேருக்கும் போதுமான வருமானம். எனவே அங்கு நீடிக்கவே சகியும் விரும்பினாள் பொருளாதார அடிப்படையில்.

மிருதுளா வந்த உடன் அவளிடம் கார்த்திக் போட்டு கொடுத்து விட வேகமாய் தன் அக்காவை தேடி ஓடினாள். பாதம் முழுக்க வெள்ளை துணியால் கட்டி மருந்துப் போட்டு இருந்தார்கள். மருந்தின் வீரியமோ என்னமோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளை இப்படி வாடிய கொடியாய் பார்த்து கண்கள் கலங்கிப் போனாள் தங்கை.

அவள் இப்படி தான் எதற்கும் சட்டென்று உடைந்து போய் விடுவாள் என்று அறிந்து பின்னோடு அப்பாவும் கார்த்திக்கும் வந்தார்கள்.

“அப்பா...” என்று அக்காவின் கால்களில் இருந்த கட்டை பார்த்து அவள் பரிதவிக்க,

“ஒண்ணும் இல்லடா. அக்கா சரியாகிடுவா... நீ அவ முன்னாடி இப்படி அழாத.. ரொம்ப வேதனை படுவா” என்று சமாதனம் செய்தவருக்கும் மனமெல்லாம் வேதனை சூழ்ந்து போனது.

வேலைக்கு போய் முழுதாய் ஒரு மாதம் கூட முடியவில்லை. அதற்குள் இப்படி படுக்கையில் வந்து விழுந்து விட்டாளே என்று மூவருக்கும் வருத்தமாய் போனது. ஆரம்பமே இப்படி என்றால் இன்னும் போக போக என்னவெல்லாம் ஆகுமோ... என்று மனதில் சஞ்சலம் எழ ஆரம்பித்தது.

அதை சகியிடம் வெளிப்படையாக காட்டிக் கொள்ள முடியாது. அவள் கொண்டுள்ள நம்பிக்கையின் அளவு உச்சத்தை தொடும். இது போல சிறு சிறு விசயங்களுக்கு எல்லாம் அவள் அதிகம் அலட்டிக் கொள்ளவே மாட்டாள்.

வந்தால் மலை... வரலன்னா மயிரேன்னு போய் கிட்டே இருப்பாள். அது அவளுடைய இயல்பு. குடும்பத்தில் இவள் ஒருவள் இந்த அளவு நம்பிக்கையுடன் இருந்ததால் தான் இந்த அளவுக்கு குடும்பம் நொடித்து போய் இருந்தாலும் தகவமைத்துக் கொள்ள முடிந்தது.

இல்லையென்றால் கிருஷ்ணனின் குடும்பம் இருந்த இடம் தெரியாமல் எப்பொழுதோ அழிந்துப் போய் இருக்கும்.

அடுத்த நாள் வேலைக்கு போகிறேன் என்றவளை மூவரும் முறைத்துப் பார்க்க,

“எங்க மேனேஜர் ஒரு மாதிரி... ஏதாவது பேசிடுவாரு... ப்ளீஸ் நான் போறேன்...” என்றவளை கடுமையாக பேச மனம் வராமல்,

“நான் உங்க மேனேஜெர் கிட்ட பேசுறேன் சகி... நீ இன்னைக்கு ஒரு நாலாவது விடுமுறை எடுத்துக்கோ. இந்த நிலையில உன்னால நடக்க முடியாது...” என்று கார்த்திக் சொல்ல,

“இல்ல கார்த்திக். இன்னைக்கு ஒரு அசைங்க்மென்ட் இருக்கு. அதை கண்டிப்பா முடிச்சே ஆகணும்... இல்லன்னா இந்த ப்ராசஸ் அப்படியே பெண்டிங் ஆகி போயிடும்” என்று சொன்னவளை எவ்வளவு முறைக்க முடியுமோ அந்த அளவுக்கு முறைத்து பார்த்தான்.

“எனக்கு ஒண்ணும் இல்லை... மிரு நீ காலேஜ் கிளம்பு... அப்பா நீங்க நூலகம் போகணும்னு சொன்னிங்கல்ல கிளம்புங்க. கார்த்தி நீ அந்த ஜிம் மாஸ்ட்டர பார்க்க போகணும்னு சொன்னல்ல கிளம்பு..” என்று அனைவருக்கும் அவரவர் வேலையை சுட்டிக் காட்டிவிட்டு தானும் அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டாள்.

அவளது பிடிவாதத்தை பார்த்து,

“ஆனாலும் உனக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது சகி...” என்று முறைத்துவிட்டு,

“அலுவலகம் போ... ஆனா நான் தான் கொண்டு வந்து விடுவேன். அதுக்கு சம்மதம்னா போ. இல்லன்னா போகாத...” என்று உறுதியாக சொல்லிவிட,

இதற்கும் சம்மதிக்க வில்லை என்றால் அவன் இன்னும் கடுப்பாவான் என்று உணர்ந்து சரி என்றாள். காலையில் ஆரம்பித்த இந்த சச்சரவில் அலுவலக நேரம் கடந்து போய் மேலும் ஒரு அரைமணி நேரம் தாமதமாகி இருந்தது.

Loading spinner

Quote
Topic starter Posted : October 21, 2025 11:48 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top