தன் முன் கூனின்றி நிமிர்ந்து நின்றிருந்தவளை தரம் வாய்ந்த ரோலிங் சேரில் பணக்கார மிடுக்குடன் திமிராய் ஏமாற்றப்பட்ட வலியை உள்ளடக்கி அமர்ந்தபடி ஏளனமாக, கோபமாக, வெறுப்புடன் என எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கியபடி பார்த்துக்கொண்டு இருந்தான் சர்வேஸ்வரன்.
தி சர்வா இண்டர்நஷனல் க்ரூப்ஸ் ஆப் கம்பெனியின் ஓனர் தான் இந்த சர்வேஸ்வரன். பணக்கார தோற்றம், எதிலும் ஒரு நேர்த்தி, எதிலும் ஒரு பெர்பெக்ஷன். பேசும் பேச்சு கூட வசதியை பார்த்து தான் அவனுக்கு உதிரும். இல்லையென்றால் ஒரு பார்வை கூட பார்க்க மாட்டான். அந்த அளவுக்கு பண திமிர் அவனிடம் இருந்தது.
அந்த அளவு பண மோகமும் திமிரும் அவனை கட்டிப் போட்டு இருந்தது. பிறந்ததில் இருந்து பணம் பணம் மட்டும் தான் அவனது தாரக மந்திரமாய் ஓதப்பட்டும் இருந்தது. மனித உணர்வுகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.
பண மோகத்தில் மிதந்து இருந்தவனுக்கு இந்த கோவம் அவசியமற்றது தான். ஆனால் அவன் சந்தித்த அவமானம் அவனை விட்டு அகல மறுத்ததே. அவன் என்ன செய்வான்.
அத்தனை பேரின் முன்னிலும் தன்னை தலை குனிய வைத்தவளை கண்டு கட்டுக்கடங்காமல் கோவம் வந்தது. அந்த நிகழ்வு நடந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஓடி விட்டது என்றாலும் அதன் காயம் இன்னும் பச்சை ரணமாய் உள்ளுக்குள் புரை ஓடிப் போய் இருந்ததை அவனே அறியவில்லை.
இவ்வளவு நாளும் அவனது சொந்த வாழ்க்கை, பிசினெஸ் என்று ஒரு லயத்தில் ஓடிக்கொண்டு இருந்தான். ஆனால் அதை கெடுக்கும் வண்ணமாகவே இதோ அவனின் கண் முன்பு வந்து நிற்கிறாள் சகி...
அவளை வெட்டவா குத்தவா என்று வெறுப்போடு பார்த்துக்கொண்டு இருந்தான் சர்வேஸ்வரன். அவளோ இந்த நிகழ்வு எப்படி ஏற்பட்டது என்று தன்னையே திட்டிக்கொண்டாள்.
சர்வா கம்பெனி என்று தெரியும் தான். ஆனால் அவன் முன்பு வந்து தான் நிற்க நேரிடும் என்று அவளே அறியாதுப் போனாள். எத்தனையோ கடை ஊழியர்களில் ஒருவராய் தானும் இருந்துவிட்டு போகலாம் என்று தான் எண்ணினாள். ஆனால் அவளது போதாத காலமோ என்னமோ சர்வாவையே நேரில் சந்தித்து இதோ அவனின் வெட்டும் பார்வையில் சங்கடப்பட்டு நிற்கிறாள். சங்கடம் மட்டும் தான் இருந்ததே தவிர தலைகுனிய வில்லை.
சர்வா அவளை கூர்ந்துப் பார்த்தான். அவனது பார்வையில் எதிரில் இருந்தவள் சாம்பலாகி கொண்டிருந்தாள். நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் எல்லாம் அவன் கண்முன்னே வந்து போனது. தான் பட்ட அவமானம் அதில் எழ குமைந்து போனான்.
நான்கு வருடங்கள் ஆகியும் அவளால் ஏற்பட்ட அவமானத்தை மறக்கவே முடியவில்லை அவனால்.
ஆசை ஆசையாய் திருமணம் செய்யவில்லை என்றாலும் ஊரு பேருக்காகவாவது திருமணம் செய்து தான் ஆகவேண்டும் என்று முடிவெடுத்து, பல வரன்களை அலசி ஆராய்ந்து சகியினை தேர்ந்தேடுத்து மணவறை வரை வந்தது.
இருவீட்டுக்கும் பிடித்துப் போக மேற்கொண்டு திருமணம் பேசி அதற்கு எல்லா ஏற்பாடு இனிதாக நடைபெற்றுக் கொண்டிருக்க, திருமணம் நடக்க இருக்கும் நாளன்று காலையில் எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கவில்லை என்று எழுதி வைத்துவிட்டு ஓடிப்போனாள்.
அப்படி ஓடிப்போனவளை இதோ இத்தனை ஆண்டுகள் கழித்து தன் முன் மீண்டும் பார்த்தான் சர்வா. பார்த்தவனுக்கு ஒரு நொடியிலே பழைய நினைவுகள் எல்லாம் அணிவகுக்க கண்களெல்லாம் சிவந்துப் போனது. அன்று திருமண மண்டபத்தில் எவ்வளவு பேச்சுக்கள். வருபவன் போறவன் முதற்கொண்டு தன்னை கேலி பேசி சிரித்தது இன்றும் கண் முன் எழ அவளை கொலை வெறியோடு பார்த்தான்.
சகியுமே உள்ளுக்குள் அதிர்ந்து தான் போனாள். இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் இவனை இப்படி நேருக்கு நேர் சந்திப்போம் என்று அவளுமே எதிர்பார்க்கவே இல்லை. அவளுக்குமே இது மிக பெரிய அதிர்வாகத் தான் இருந்தது.
தன்னுடைய தோழி ஒருத்தி வேலை பற்றிய விவரம் சொல்லி அவளே இந்த கம்பெனிக்கு ரெஸ்யூமை அனுப்பிவிட்டாள். கம்பெனியில் இருந்து எல்லாமே போன் இண்டர்வியூ தான். அதை அட்டென் செய்த பிறகு கூட அவளுக்கு இது யாருடைய கம்பெனி என்று தெரியாமல் போனது தான் விதியோ என்னவோ...
இங்கு வந்து சேர்ந்த பிறகு தான் இது யாருடைய கம்பெனி என்றே தெரியவந்தது. தெரிந்தும் அப்படியே போகாமல் உள்ளே நுழைந்தது அவளுடைய மடத்தனம் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டாலும் அவளுக்கு தற்பொழுது இந்த வேலையின் அவசியம் இருக்கிறது. அவளும் என்ன செய்வாள்.
வீட்டில் அப்பாவும் தங்கையும் இன்னொருவனும் இருக்கும் பொழுது தனக்காக இல்லை என்றாலும் அவர்களுக்காகவாவது இந்த வேலைக்கு போக வேண்டுமே, நான்கு வயிறு இருக்கிறதே.
இண்டர்வியூ எல்லாம் முடிந்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டரும் வாங்கி இரண்டு நாட்கள் வேலையும் பார்த்துவிட்டாள். இரண்டு நாட்களாக அவளுக்கு எந்த இடையூறும் இருக்கவில்லை. யாரையும் சந்திக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.
இதோ இப்பொழுது தான் மேனேஜர் வந்து “எம்டியை பார்த்துட்டு வந்திடுங்க” என்று சொல்லவும் வந்தாள். வந்தவளுக்கு மூச்சை அடைக்காதது ஒன்று தான் குறை. இரண்டு நாட்களாக வேலைக்கு வந்தவளுக்கு அவன் எங்கு இருப்பானோ என்று கவலை இருந்தது என்றாலும்,
கூட வேலை செய்யும் மற்ற கொலிக்ஸ் எல்லோரும் “எம்டி இங்க வரவே மாட்டங்க. அப்படியே வந்தாலும் மாதம் ஒரு முறை மட்டும் தான் வருவாரு” என்று சொல்லி இருந்ததால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தாள்.
ஆனால் அவளது நிம்மதி இவ்வளவு சீக்கிரம் பறிபோகும் என்று எண்ணி இருக்கவில்லை. அதுவும் மூன்றே நாளில் இவனை பார்ப்போம் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. கண்கள் எல்லாம் கலங்கிக் கொண்டு வந்தது ஆனாலும் அதை நேரில் இருப்பவனிடம் காண்பித்துக் கொள்ளாமல் நிமிர்வாக இருப்பது போலவே அவனிடம் கட்டிக் கொண்டாள் சகி.
சர்வாவுக்குமே முதலில் திகைப்பு தான்... தன் கண் காட்டும் செய்தியை நம்ப முடியாமல் சகியை பற்றி விவரங்கள் அடங்கி இருந்த கோப்பையை மீண்டும் மீண்டும் பார்த்தான். நான்கு வருடங்களுக்கு முன்பு இரண்டு மூன்று கம்பெனி வைத்து நிர்வாகம் செய்தவள் இன்று தன் அலுவலகத்தில் அதுவும் சாதாரண ஒரு வேலைக்கு வந்து இருப்பவளை கண்டு புருவம் சுருக்கினான்.
அவள் வருவதற்கு முன்பே தன் எண்ணங்களை மீட்டுக் கொண்டவனிடம் எஞ்சி நின்றது அவள் தன்னை ஏமாற்றிய அந்த நாள் மட்டும் தான். அதை பிடித்து வைத்துக் கொண்டவன் அவள் மீது இருந்த சிந்தை கலைந்து கோவம் குடி கொண்டது. அது அவன் நாவிலும் நர்த்தனம் ஆடியது.
"அது எப்படிடி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம என் கம்பெனின்னு தெரிஞ்சே நீ வேலைக்கு வந்த? இல்ல நீ தெரியாம வந்தியா? உன்னை பார்த்தால் நீ தெரியாம வந்த மாதிரி தெரியலயே...!” என்றவன்,
தேவையில்லாமல் அவளது கழுத்தை ஆராய்ந்தான். அந்த கழுத்தில் அவள் திருமணமானவள் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருப்பதைக் கண்டு உள்ளுக்குள் ஏதோ ஒன்று முகிழத் தான் செய்தது. ஆனால் அதை பெரிது படுத்தாமல்,
“என்னடி சொத்தை எல்லாம் இழந்துட்ட போல... அந்த சொத்து இருந்ததுனால தானே அன்னைக்கு அவ்வளவு திமிரா மண்டபத்தை விட்டு போன... இப்போ என்ன ஆச்சு... சொத்து எல்லாத்தையும் ஒளிச்சு கட்டிட்டு இப்போ என்கிட்டே இருக்கிற சொத்தை குறி வச்சு இருக்கியா? என்னை மயக்கி என் சொத்தை அடையறதுக்காக நீ எதுவும் பிளான் பண்ணி தான் என்னோட கம்பெனிக்கு வந்திருக்க இல்லையா...?” என்று நெஞ்சில் ஈரம் இல்லாமல் கேட்டவன், அவளை பதிலே பேச விடாமல், அவனே அதுக்கு “அப்படித்தானே” என்று பதில் சொல்லி உருவாக படுத்திக் கொண்டான்.
அவனது குற்றச்சாட்டுகளை மறுக்கும் நிலையில் அவள் இல்லை. அப்படி மறுத்தாலும் அவன் அவனது எண்ணத்தை மாற்றிக் கொள்ளப் போவதுமில்லை என்று அறிந்தவள், அவன் முன் வைத்திருந்த தன் கோப்புகளையும் சர்டிபிகேட்களை எடுத்துக் கொண்டு எதுவும் சொல்லாமல் வந்த வழியே திரும்பிச் செல்ல, போனவளை சொடுக்கிட்டு அழைத்தான் சர்வேஸ்வரன்.
“இப்படி எதுவும் சொல்லாம போனா நீ உத்தமின்னு நான் நம்பிடுவேனா. எல்லாமே முன்கூட்டி ப்ளான் பண்ணி தானே என் வாழ்க்கைக்குள்ளேயே நீ வந்த. அதே போல மறுபடியும் என் லைஃபை விட்டு போன. நீ கொடுத்த அவமானத்தை என்னால இன்ன வரைக்கும் மறக்கவே முடியலடி. கண்டிப்பா உனக்கு அதை விட இரண்டு மடங்கா நான் திருப்பி தருவேன்.” என்று எள்ளலாக அவன் சிரிக்க, அவள் பதிலே பேசவில்லை.
‘நீ என்ன வேணாலும் நினைச்சுக்கோ நான் இப்படித்தான். என நான் ஒவ்வொரு முறையும் உன்கிட்ட என்னை நிரூபிக்க முடியாது’ என்று தனக்குள்ளே எண்ணிக்கொண்டவள் கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல போனவளை சட்டென்று எழுந்து புயல் வேகத்தில் உள்ளுக்குள் இழுத்து கதவை அழுத்தமாக மூடினான் சர்வா.
அவன் முரட்டுத்தனமாக அவளை தொட்டு உள்ளே இழுத்த வேகத்தில் அவன் மீதே வந்து மோதினாள். அதில் எரிச்சல் கொண்டவன் அப்படியே கதவின் மீது அவளை இருத்தியவன் கண்களில் அப்பட்டமாய் சினம் வெடித்தது.






