வணக்கம் தோழமைகளே..
இது டைரெக்ட் அமேசான் ஸ்டோரி..
தலைவன் - உதயாதிபன்
தலைவி - வராளி
“மேடம் எங்க இறங்கணும்னு சொல்லுங்க... அங்கயே இறக்கி விட்டுடுறோம்” என்று கேட்டார் ட்ரைவர். “இல்ல அதெல்லாம் வேணாம் சார்.. முதல்ல வர்ற பஸ் ஸ்டாண்ட்ல இறக்கி விடுங்க அது போதும்” என்றாள்.
“இல்ல மேடம்...” என்று அவர் ஏதோ சொல்ல வர, “உங்க கருணைக்கு ரொம்ப நன்றிங்க சார்... நீங்க இவ்வளவு தூரம் உதவி செய்யிறதே பெருசு... இதுக்கு மேல உங்களை தொந்தரவு செய்ய விருப்பம் இல்லை” என்று முடித்துக் கொண்டாள்.
“என்ன கண்ணு இப்படி மூணாவது மனுசன் மாதிரி வெட்டி பேசுற... இவரு நம்ம அமைச்சர் தம்பி...” என்று அவர் சொல்ல, அதை காதிலே வாங்காதவள் போல “பாட்டி உங்க மருமக எப்போ ஊருக்கு வராங்களாம்?” என்று பேச்சை திருப்பி விட்டாள்.
அவளுக்கு அருகில் கால் மேல் கால் போட்டு கூர்ந்த பார்வையுடன் அமர்ந்து இருந்தானே தவிர இப்பொழுது வரை ஒரு சொல்லை அவன் உதிர்க்கவில்லை. இரும்பு மனிதன் போல எதற்கும் அசையவில்லை. அடிக்கடி அவனது வலிமையான கை மீசையை முறுக்கி விட்டுக் கொண்டே இருந்தது. அதை உணர்ந்துக் கொண்டாள். ஆனால் பார்க்கவில்லை. அவன் கை அடிக்கடி மேலே கீழே என உயர்ந்து தாழ்வதிலே புரிந்துப் போனது. அவன் அதை தான் செய்கிறான் என்று.
இரையை துரத்தி பாயும் வேங்கை வாயை பிளந்து உறுமும் முகம் அவனது கை காப்பில் இருந்தது. அது அவனது உரமேறிய கைக்கு அப்படி பொருந்திப் போனது. அவனது குணமும் அது தானே.. வலிமை குன்றிய வேட்டையை துரத்தி பிடித்து தன்னை சிங்கமாய் உணரவைக்கும் மிருக குணம் தானே இவனுக்கும். பிறகு பொருத்தம் சரியாகத்தானே இருக்கும்..
“ப்ச்” என்று தன் சிந்தனை போகும் போக்கை கண்டு தன்னை தானே அடக்கிக் கொண்டவள் குழந்தையின் புறம் கவனத்தை திருப்பிக் கொண்டாள். அந்த நேரம் டிரைவர் சடன் ப்ரேக் போட வராளி குழந்தையோடு முன் சீட்டில் போய் முட்டிக் கொண்டாள்.
“அவுச்” என்று நெற்றியை தேய்த்துக் கொண்டாள். ஆனால் உதயாதிபன் கொஞ்சம் கூட அசையவில்லை. அப்பொழுது தான் அவனது காலை பார்த்தாள். கால் மேல் காலை போட்டு எதிர் சீட்டில் அவனது காலை ஊன்றி இருந்தான்.
“ம்கும்” என்று நொடித்துக் கொண்டவள் வெளியே பார்க்க, பஸ்டான்ட் கடந்து போனது. “சார் வண்டியை நிறுத்துங்க. பஸ் ஸ்டான்ட் வந்திடுச்சு” என்றாள். ஆனால் வண்டி நிற்கவே இல்லை.
“சார் உங்கக்கிட்ட தான் சொல்றேன்.. ப்ளீஸ் வண்டியை நிறுத்துங்க” என்றாள் சத்தமாக. அதில் அவளின் மகன் “ஹும்ம்ம்ம்” என்று சிணுங்க,
“இவன் ஒருத்தன்...” என்று முணகியவள், பின் “ஒன்னும் இல்லடா கண்ணா... அம்மா சும்மா தான் சத்தம் கொடுத்தேன்” என்று அவனை தட்டிக் கொடுத்தவள் “வண்டியை நிறுத்துங்க” என்றாள் கொஞ்சம் குரலை தாழ்த்தி.
“மேடம் சார் தான் வண்டியை நிறுத்த வேண்டாம்னு சொன்னாங்க” என்றார் ஓட்டுனர். “ப்ச்...” என்று சலித்தவள், “உங்களுக்கு எதுக்கு சிரமம், நாங்க இங்கயே இறங்கிக்கிறோம்” என்று உதயாதிபனை பார்க்காமல் அவன் பக்கம் தலையை மட்டும் திருப்பி கீழே பார்த்தபடி சொன்னாள்.
“கேட்கல” என்றான் திமிராக. இன்னும் கொஞ்சம் சத்தம் கூட்டி அவள் சொல்ல, அவன் மறுபடியும் கேட்கல என்றான். அதில் கடுப்பனவள் அவனை நிமிர்ந்து பார்த்து முறைப்புடன்,
“நாங்க இங்கயே இறங்கிக்கிறோம்” என்றாள்.
“மழை வருது..” ஆழ்ந்த அழுத்தமான குரலில் சொன்னான்.
“உங்க கருணைக்கு ரொம்ப நன்றி. அடுத்த முறை எலெக்ஷன் வந்தா கண்டிப்பா உங்களுக்கே ஓட்டு போடுறோம். ப்ளீஸ் இப்ப இறக்கி விடுங்க”
“ஓ...! நீ ஓட்டு போட்டு தான் நான் ஜெயிக்க போறனா?” நக்கலுடன் கேட்டான் அவன்.
“ஆமாம்.. இதுல என்ன சந்தேகம். எங்க ரெண்டு ஓட்டுக்காக தானே எங்களை இந்த கார்ல எத்துநீங்க.. அதனால கண்டிப்பா உங்களுக்கு எங்க ரெண்டு பேரோட ஓட்டும் கிடைக்கும்... கவலைப்பட வேண்டாம்” என்றாள் எரிச்சலாக. அவளது எரிச்சலான குரலில் நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்தான்.
“வாய் ரொம்ப தான் நீளுது” என்று சொன்னான். அதில் என்ன உணர்வு கொட்டி இருந்தது என்று புரியாமல்,
“நீங்க என் விசயத்துல தலையிட்டா இன்னுமே நீளும்... சோ ப்ளீஸ் இங்கயே இறக்கி விடுங்க. உங்க கருணைக்கு ரொம்ப நன்றி” என்றாள் பிடிவாதமாய். ஏனோ அவனுக்கு அருகில் அவளால் அமரவே முடியவில்லை. அவளின் பிள்ளை வேறு ஒரு பக்கத்துக்கு அவளை படுத்தி எடுத்தான்.
உதயாதிபனின் பார்வை அவளிடம் இருந்து கீழே இறங்கியது. அவளுக்கு பக்கென்று ஆனது. “ப்ச்..” அவள் அசூசை ஆனாள். ஏற்கனவே சரியாக இருந்த புடவையை இன்னும் சரியாக இழுத்து விட்டுக் கொண்டாள். ஆனால் அவன் அதை கண்டுக் கொள்ளவேயில்லை. அவனது பார்வை அவளின் முந்தானை மூடி இருந்த இடத்தை பார்த்தது.
குழந்தையின் பசியாறும் மெல்லிய சத்தம் கேட்டது. “குழந்தை இன்னும் பசியாறல போலையே...” என்று கேட்டான். அதில் அவளுக்கு ஒரு மாதிரி ஆகிப்போனது.
“நான் வெளில போய் அவனை கவனிச்சுக்குறேன்” என்றாள் வெடுக்கென்று. “வெளில பலர் மத்தியில அவனுக்கு பால் குடுப்ப.. இங்க இருட்டு மறைவில அவனுக்கு பசியாத்த மாட்ட அப்படி தானேடி?” என்றான் அமைதியாக அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில். அந்த குரலில் அதிக அளவுக்கு கோவம் கொட்டிக் கிடந்தது.
அவளால் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. “அவன் பசியாறட்டும்... அதுக்குள்ள நீ போகும் இடமும் வந்திடும்... ஓவரா சீன் போடாத.. உன் சீன் எல்லாம் இங்க ஓடாது” என்று சொன்னவன் தன் போனை நோண்ட ஆடம்பித்து விட்டான்.






