அன்றாடம் விடியும் காலை பொழுதினை குறுங்கண்ணோரம் பார்த்துக் கொண்டு நின்றாள் ஆதினி. எப்பொழுதும் போல ஒரு விடியல் தான். இதில் மட்டும் என்ன வேறுபாடு என்று ஆராய்ச்சியுடன் அந்த காலை வேளையை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
வீட்டின் உள்ளே பேச்சுக்குரல் கேட்டது. “இன்றைக்கு என்ன நாள்னு மறந்து போச்சா…? வேலை தலைக்கு மேல கிடக்கு இப்படி அசமந்தமா இருந்தா எப்படிங்க… கொஞ்சமாச்சும் சுருசுருப்பா இருக்குறது இல்லையா” என்று அப்பாவிடம் கேட்ட தாயின் பேச்சில் எரிச்சல் மண்டியது இவளுக்கு.. அந்த எரிச்சலை கொஞ்சமும் குறைக்காமல் தன் தாய் குமுதா மீது காட்ட, அவளது பார்வையை கொஞ்சமும் சட்டை செய்யாமல் தன் கணவனிடம்,
“மாப்பிள்ளை இன்னைக்கு இரவு இங்க வராரு.. அவருக்கு என்னென்ன வேணும்னு பார்த்து வாங்கணும். உங்களுக்கு தெரியும் தானே அவருக்கு என்னென்ன பிடிக்கும்னு” என்று கேட்க தலையை தலையை ஆட்டி கேட்டுக் கொண்டார் அந்த வீட்டின் தலைவர் வைகுந்தன்.
“அப்பா எனக்கு அப்படியே ஒரு பாக்கெட் ஸ்வீட்…” என்றான் தம்பி விதுல்.
“அது எதுக்குடா தனியா வாங்கிக்கிட்டு, அதுதான் வரும்போதே மாமா வாங்கிட்டு வந்துடுவாரே. பிறகு அதுல எதுக்கு பணத்தை போட்டுக்கிட்டு… அதுக்கு பதிலா நல்லா வெடக்கோழியா ரெண்டு பார்த்து வாங்கிட்டு வாங்கப்பா. நாளைக்கும் நாளைக்கு மறுநாளுக்கும் சமைக்கலாம்.” என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் சொன்ன தன்னுடைய இரண்டாவது அக்கா சஞ்சுவை முறைத்துப் பார்த்தாள் ஆதினி.
“ஆமாங்க இவ சொல்றதும் சரி தான். அப்படியே ரெண்டு கிலோ மீனு மாப்பிளையை மார்க்கெட்டுக்கு கூட்டிட்டு போய் வாங்கிட்டு வந்திடுங்க நாளைக்கு காலையிலயே. அப்போ தான் காலையிலேயே மீன் குழம்பு வைக்க முடியும். இரவு தோசைக்கு நல்ல டேஸ்ட்டா இருக்கும்” என்று குமுதா ஒரு லிஸ்ட் போட இன்னும் காண்டானது ஆதினிக்கு.
அவளுடைய முறைப்பை அங்கு யாரும் கொஞ்சம் கூட சட்டை செய்யவே இல்லை… ‘நீ நீ பாட்டுக்கு முறைச்சுக்கிட்டே இரு. நாங்க எங்க வேலையை பார்க்கிறோம்’ என்பது போல அவர்களின் நடவடிக்கை இருந்தது..
“ஆமாம் பெரிய பொல்லாத மாப்பிள்ளை..” கடுப்புடன் இண்டர்வியூவுக்கு தயாராகிக் கொண்டு இருந்தாள் ஆதினி. அதென்னவோ அவனுக்கு கொடுக்கும் வரவேற்பை எப்பொழுதுமே ஆதினி விரும்பியதே இல்லை. கடுப்பு தான் வரும் இவளுக்கு.
மூத்த அக்காவின் கணவன். அவனது வருகைக்கு தான் இவ்வளவு லிஸ்ட் இவ்வளவு பரபரப்பு எல்லாம்… இந்த பரபரப்பு எல்லாம் இவர்கள் நால்வருக்கு மட்டும் தான். ஆதினிக்கு எப்பொழுதுமே ஒவ்வாமை தான் வரும்.
பெயர் பெருவளத்தான். பெயருக்கு ஏற்றார் போல கம்பீரமாக மீசையை முறுக்கிக்கொண்டு கையில் போட்டு இருக்கும் காப்பு தெரித்து விடும் கோவம் வந்தால். அந்த அளவுக்கு முரட்டு பீஸ். ஆனால் அன்பினால் அவனை பூனையை போல தடவி கொடுத்து விட்டால் போதும். ஒரு சின்ன பானையில் ஒளியும் பூனை போல மாறிவிடுவான்.
கோவம் அரிதிலும் அரிது… பெரும்பாலும் தன் கோவத்தை அவன் வெளியே காட்டவே மாட்டான். எவ்வளவு பொறுத்துப் போக முடியுமோ அந்த அளவுக்கு பொறுத்துப் போய் விடுவான். ஏன் தேவையில்லாத சச்சரவு என்று தன்னை தானே அடக்கிக்கொண்டு விலகி விடுவான். ஏனெனில் அவனது கோவத்தின் வீரியம் மிக அதிகம். அதை யாராலும் தாங்க முடியாது. அதனாலே தன் கோவத்தை பெரிதாக காட்டிக் கொள்ளவே மாட்டான்.
ஒவ்வாமை என்றாலும் அவ்விடத்தை விட்டு கடந்துப் போய் விடுவானே தவிர மல்லுக்கு நிற்க மாட்டான். அப்படி பட்டவனை தான் ஆதினி துச்சமாக நினைக்கிறாள்.
அதை அறிந்து இருந்தும் பெருவளத்தான் அவளிடம் இயல்பாகவே இருக்கிறான்..
அன்று மாலையே பெரிய அக்காவோடு அவளது கணவன் பெருவளத்தான் அந்த வீட்டுக்கு வந்தான். முதல் மாப்பிள்ளை… அந்த உறவுக்கு உரிய எந்த பந்தாவும் இல்லாமல் மிக இயல்பாக இருந்தான் அவன்.
“வாங்க மாப்பிள்ளை… வாடி கனிகா” குமுதா இருவரையும் வரவேற்று உபசரிக்க,
“வரோம் அத்தை…” என்றவன் மாமனாரோடு கூடத்தில் அமர்ந்துக் கொண்டான். தன் மனைவியின் உடன் பிறந்தவர்களை நலம் விசாரித்தவனிடம் ஆதினி மட்டும் முறைத்துக் கொண்டு போய் விட்டாள். அது எப்பொழுதும் நடக்கும் நிகழ்வு என்பதால் அதை யாரும் அங்கு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. முக்கியமாக பெருவளத்தான்.
சிறுபிள்ளை என்று அவளை எண்ணியதால் அவளின் புறக்கணிப்பு பெரிதாக அவனை பாதிக்கவில்லை.
“ம்மா வரும் பொழுதே செம்ம பசி.. ஏதாவது இருக்கா?” என்று அடுப்படிக்குள் நுழைந்துக் கொண்டாள் பெரியவள்.
“தம்பிக்கு காபி போட்டு கூட குடுக்கலையாடி நீ?” என்று குமுதா கேட்டுக் கொண்டே அவளை தொடர்ந்து உள்ளே வந்தார்.
“எங்க வந்த உடனே கிளம்புன்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டாரு உங்க மருமகன் நான் என்ன செய்யட்டும்” என்று குறைபட்டுக் கொண்டவள் இருந்த சாப்பாட்டை தட்டில் எடுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்து விட்டாள் அங்கேயே..
பெருவளத்தான் வேலை விட்டு வந்து ஒரு மணி நேரம் கழித்தே தான் கிளம்பினார்கள். ஆனாலும் வாய் கூசாமல் பொய் பேசினாள். அந்த ஒரு மணி நேரத்தில் இரண்டு மூன்று முறை அவளிடம் காபி கேட்டு விட்டான். ஆனால் அவளோ,
“அது தான் அம்மா வீட்டுக்கு போறமே பிறகு என்ன இங்க தனியா ஒரு காபி… அதோட அந்த பாத்திரத்தை வேறு விளக்கனும் அதுக்கு பேசாம அங்க போய் ஒரேடியா குடிச்சுக்கலாம். கிளம்புங்க” என்று வேலை விட்டு வந்த மனிதனுக்கு ஒரு வாய் காபி தண்ணி கூட குடுக்காமல் இழுத்துக் கொண்டு வந்துவிட்டாள்.
இங்க வந்தும் உடனடியாக அவனுக்கு காபியை போட்டுக் கொண்டு வந்து தரவில்லை. அவள் உண்டு முடித்து விட்டு அதன் பிறகே தன் தாயிடம் காபியை போட சொல்லி சொல்லிவிட்டு போய் விட்டாள். இவர் தான் எட்டு மணிக்கு இரவு உணவு சாப்பாடு சாப்பிடும் நேரத்தில் ஒரு வாய் காபியை கொண்டு வந்து கொடுத்தார்.
அதையும் ஒன்று சொல்லாமல் வாங்கி குடித்தவன் கேரம் விளையாட ஆரம்பித்து விட்டான் அவனது மச்சினனோடு.. அவன் ஒற்றையாய் வளர்ந்த பிள்ளை என்பதால் இங்கே வந்தால் அனைவருடனும் சேர்ந்து மகிழலாம் என்றே வாரம் இரண்டு நாள் வந்து தங்கி விட்டு போவான். அவன் வருவதில் அனைவருக்குமே மகிழ்ச்சி தான். ஆனால் ஒருவளை தவிர… வேறு யார் நம்ம ஆதினி தான் அது.
அவள் மட்டும் அவனை பார்த்தால் எண்ணையில் போட்ட கடுகாய் முறைத்துக் கொண்டு போவாள். அவளது முறைப்பில் இவனுக்கு என்ன சுவாரஸ்யம் இருக்கோ தெரியவில்லை அவளை வம்பிழுத்துக் கொண்டே இவனும் இருப்பான்.
“உங்க ரெண்டு பேரு பஞ்சாயத்தும் எப்போ தான் முடிவுக்கு வருமோ தெரியல…” என்று கடுப்படித்து விட்டு போய் விடுவாள் அவளின் பெரிய அக்கா…
இன்றைக்கும் அதே போல கேரம் விளையாட ஆதினியை அழைக்க,
“எனக்கு என்ன வேலை வெட்டி இல்லையா உங்களை மாதிரி வெட்டியா பொழுது போக்கிக்கிட்டு இருக்க…” கடுப்படித்தவள் தன்னுடைய லேப்ட்டாப்பில் மூழ்கிப் போனாள். ஆனால் அவளுடைய அறைக்குள் நுழையவில்லை மாறாக கூடத்தில் கீழே அமர்ந்து சுவற்றில் சாய்ந்து தன் மடியில் கணினியை வைத்துக் கொண்டு வேலையை பார்த்தாள்.
“அப்படி என்ன பண்ற” என்று கேட்டுக் கொண்டே அவளின் அருகில் வந்து அமர்ந்தான் பெருவளத்தான்.
அவன் அப்படி அருகில் வரவும் அவள் முறைத்துப் பார்த்தாள். அவளது பார்வையை கண்டு கொள்ளாமல் அவளின் தம்பியும் இவனும் ஆளுக்கு ஒரு புறமாய் அமர்ந்து அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்தார்கள்.
மிகப்பெரிய கம்பெனியில் அவளுக்கு இண்டர்வியூ வந்து இருந்ததை பார்த்து வியந்துப் போனார்கள்.
“ஹேய்… சூப்பர் குட்டி…” என்று அவன் பாராட்ட அவளது முகத்தில் எந்த உணர்வும் இல்லை…

